லித்தியம்-அயன் பேட்டரி வெடிப்புகளால் பெரும் ஆபத்து: கனடாவில் விடுக்கப்படும் எச்சரிக்கை
டொராண்டோ நகரில் மின்சார மிதிவண்டிகள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகள் அண்மைக்காலமாக அடிக்கடி வெடித்துச் சிதறுவது "பொதுமக்களின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட கடுமையான அச்சுறுத்தல்" என்று டொராண்டோ தீயணைப்புத் துறைத் தலைவர் ஜிம் ஜெசாப் எச்சரித்துள்ளார்.
இந்த பேட்டரிகள் இயல்பாகவே ஆபத்தானவை இல்லை என்றாலும், தரமற்ற பேட்டரிகள் திடீரென வெடித்து கடுமையான உடல் காயம், உயிரிழப்பு மற்றும் பெரும் சொத்து சேதங்களை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேட்டரிகள் கட்டுப்படுத்த முடியாத வெப்ப நிலை, நிலையை எட்டும்போது, மிக அதிவேகமாக வெப்பநிலை உயர்ந்து வெறும் 90 வினாடிகளுக்குள் ஒரு அறையையோ அல்லது சுரங்க இரயில் பெட்டியையோ நச்சுப் புகையால் நிரப்பிவிடும் என்று ஜிம் ஜெசாப் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொராண்டோ நகரில் கடந்த 2020 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகளின் எண்ணிக்கை சுமார் 600 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தீயணைப்புத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
சான்றிதழ் பெறப்படாத மற்றும் முறைப்படுத்தப்படாத தரமற்ற பேட்டரிகள் இணையத்தில் எளிதாகக் கிடைப்பதே இதற்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. டொராண்டோ நகரில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் மூன்று பேட்டரி தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை மதியம் 2:30 மணியளவில், டொராண்டோவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு தற்காலிகக் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த பல மின்சார மிதிவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்தன.
அதற்கு முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை இரவு நார்த் யார்க் பகுதியில் உள்ள ஒரு தொழில்முறை கிடங்கில் லித்தியம்-அயன் பேட்டரி காரணமாகப் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.
இரண்டு அடுக்கு அபாய எச்சரிக்கையாக மாற்றப்பட்ட இந்தத் தீயை அணைக்கத் தீயணைப்பு வீரர்கள் இரவு முழுதும் போராடினர்.
இதே இடத்தில் சில நாட்களுக்கு முன்பும் ஒரு பேட்டரி தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஏப்ரல் 27ம் திகதி ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் பேட்டரி வெடித்துப் பெரும் சேதம் ஏற்பட்டது.
நமது நகரம் முழுவதும் லித்தியம்-அயன் பேட்டரி தீ விபத்துகளின் எண்ணிக்கையும் அதன் தீவிரமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.