சவுதி அரேபியா மத வழிபாட்டு தலத்தில் பாலியல் செயல் ; வங்காளதேசத்தினர் இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
சவுதி அரேபியாவின் மெக்காவில் உள்ள மசூதியில் பாலியல் செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பங்களாதேசத்தைச் சேர்ந்த ஆண், பெண் இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவில் ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ளது. இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களான மெக்கா மற்றும் மதீனாவுக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், பங்களாதேசத்தைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் என்ற ஆணும், சிதி அக்தர் என்ற பெண்ணும் சவுதி அரேபியாவுக்கு யாத்திரை சென்றுள்ளனர்.
அப்போது, மெக்காவில் உள்ள மசூதியில் இருவரும் பாலியல் செயலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
தொடர்ந்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில், ஷரியத் சட்டத்தின்படி இருவருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அதைத் தொடர்ந்து இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் இருவரும் கணவன், மனைவியா, சம்பவம் மெக்காவில் எந்த இடத்தில் நடைபெற்றது, குற்றச்சாட்டை நிரூபிக்க முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பு, இதுகுறித்து பங்களாதேச அரசுக்கு சவுதி அரேபியா தகவல் தெரிவித்ததா என்பது தொடர்பாகவும் கேள்விகள் எழுந்துள்ளன.