புதைகுழி கூறும் அதிர்ச்சி உண்மை ; புதிய தகவல்களை வழங்கும் ஜோர்தானின் பாரிய புதைகுழி
கி.பி. 6 முதல் 8-ஆம் நூற்றாண்டு வரை பைசாந்திய பேரரசில் (Byzantine Empire) லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த 'ஜஸ்டினியன் பிளேக்' (Plague of Justinian) எனப்படும் கொடிய நோய் குறித்த புதிய மற்றும் தெளிவான விபரங்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய ஜோர்தானில் உள்ள ஜெராஷ் (Jerash) நகரில் கண்டறியப்பட்ட ஒரு பாரிய மனிதப் புதைகுழியை ஆய்வு செய்ததில், அது பல ஆண்டுகளில் உருவான ஒன்றல்ல, மாறாக அந்தப் பெருந்தொற்றின் போது ஒரே நேரத்தில் புதைக்கப்பட்டவர்களுடையது என்பது மரபணு (DNA) பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

'யெர்சினியா பெஸ்டிஸ்' (Yersinia pestis) எனப்படும் பக்டீரியாவே இந்தப் பிளேக் நோய்க்குக் காரணம் என்பதை ஆய்வாளர்கள் ஏற்கனவே உறுதி செய்திருந்த நிலையில், இந்தப் புதைகுழி அந்தத் தொற்றின் தீவிரத்தை உணர்த்துகிறது.
உயிரிழந்தவர்களின் பற்களிலிருந்து எடுக்கப்பட்ட மரபணு மாதிரிகள் மூலம், அவர்கள் பல்வேறு வயது மற்றும் பின்னணியைக் கொண்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
கொவிட்-19 காலத்தில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது போல, அந்த காலத்திலும் மக்கள் ஓரிடத்தில் முடக்கப்பட்டிருந்ததையே இது காட்டுகிறது.

தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரேஸ் ஜியாங் தலைமையிலான இந்த ஆய்வுக்குழு, இந்தப் பெருந்தொற்றை வெறும் வரலாற்றுப் பதிவாக மட்டும் பார்க்காமல், ஒரு மனித அனுபவமாகப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
வர்த்தக மையமாகத் திகழ்ந்த ஜெராஷ் நகரம், இந்தப் பெருந்தொற்றினால் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதையும், மக்கள் அந்த நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டனர் என்பதையும் இந்தப் புதைகுழி விபரிக்கிறது.
இந்த ஆய்வு முடிவுகள் 'ஜர்னல் ஒஃப் ஆர்க்கியோலஜிகல் சயின்ஸ்' (Journal of Archaeological Science) இதழில் வெளியிடப்பட்டுள்ளன.