அமெரிக்காவில் பிரபல ஹாலிவுட் நடிகையின் கார் மீது துப்பாக்கிச்சூடு!
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரபல ஹாலிவுட் நடிகையின் கார் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வைல்ட் திங்க்ஸ், ஸ்டார்ஷிப் ட்ரூப்பர்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை டெனிஸ் ரிச்சர்ட்ஸ் (Denise Richards).
இவர் தனது கணவர் ஆரோன் பிலிப்ஸ் உடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே அவர்களது காரை சாலை ஓரமாக பார்க்கிங் செய்வதற்காக இடம் தேடி உள்ளனர்.
அப்போது அவர்கள் பின்னால் காரில் வந்த ஒரு நபர், தனது காருக்கு வழிவிடும்படி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து ஆரோன் பிலிப்ஸ் காரை ஒரு புறமாக திருப்பி வழிவிட்டுள்ளார்.
இருப்பினும் அந்த நபர் தொடர்ந்து டெனிஸ் ரிச்சர்ட்ஸ் மற்றும் அவரது கணவரைப் பார்த்து திட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் திடீரென அந்த நபர் தனது துப்பாக்கியை எடுத்து நடிகையின் கார் மீது சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதில் ஓட்டுநர் இருக்கைக்கு பின்புறம் துப்பாக்கியின் தோட்டா பாய்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் இருவரும் காயங்களின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவம் தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.