சமூக வலைத்தளக் காதலால் வந்த வினை ; AI பெண்ணைத் தேடி 1,900 கி.மீ. பயணம் செய்தவர் ஏமாற்றம்
சமூக வலைத்தளத்தில் அறிமுகமான பெண்ணைத் திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற ஆசையில், தனது சொத்துகளை விற்று சுமார் 1,900 கிலோமீற்றர் பயணம் செய்த 49 வயதுடைய நபர் ஒருவர், இறுதியில் அந்தப் பெண் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மரன்ஹாவோ மாநிலத்தைச் சேர்ந்த எடிமார் மார்ட்டின்ஸ் என்பவரே இவ்வாறு ஏமாற்றமடைந்துள்ளார்.
கடந்த ஆறு ஆண்டுகளாக சமூக வலைத்தளத்தின் ஊடாக ஜெசிகா ஒலிவேரா என்ற பெண்ணுடன் காதல் உறவில் இருப்பதாக நம்பிய மார்ட்டின்ஸ், அவரைத் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்ததாகக் கூறப்படும் ஜெசிகா, கிராமப்புற வாழ்க்கை மற்றும் பண்ணை வீட்டில் வசிப்பது தொடர்பான காணொளிகளைத் தொடர்ந்து பகிர்ந்து வந்துள்ளார்.
இந்தக் காணொளிகளைப் பார்த்த மார்ட்டின்ஸ், அவருடன் இணைந்து வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என நம்பியுள்ளார். இதனையடுத்து, அந்தப் பெண்ணைச் சந்தித்து திருமணம் செய்துகொள்ளும் நோக்கில், தன்னிடமிருந்த சொத்துகளை விற்று பணம் திரட்டியுள்ளார்.
பின்னர், பேருந்துகள் மூலம் சுமார் 1,900 கிலோமீற்றர் பயணம் செய்து, ஒக்டோபர் 11ஆம் திகதி பெலோ ஹொரிசோன்டே நகரைச் சென்றடைந்துள்ளார்.
எனினும், அங்கு சென்ற பின்னர் ஜெசிகாவைத் தேடியபோது, அவர் உண்மையான நபர் அல்ல என்பதும், சமூக வலைத்தளங்களில் காணப்பட்ட உருவம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கற்பனைக் கதாபாத்திரம் என்பதும் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பெரும் அதிர்ச்சியடைந்த மார்ட்டின்ஸ், தனது சொத்துகளை விற்றுப் பெற்ற பணத்தையும் இழந்த நிலையில், சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான வசதியின்றித் தவித்துள்ளார்.

இதனையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் சமூக சேவையாளர்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளனர். அவருக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதிகளை வழங்கியதுடன், சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான பயணச்சீட்டையும் ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலியான நபர்கள் மற்றும் காட்சிகளை உண்மையென நம்புவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இணையவழிக் காதல் உறவுகளில் ஈடுபடுவோர், தாங்கள் தொடர்புகொள்ளும் நபரின் உண்மையான அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் பணம் செலவிடுவதையோ, சொத்துகளை விற்பதையோ தவிர்க்க வேண்டும் என்பதையும் இச்சம்பவம் நினைவூட்டுகிறது.