கனடா செயற்கை நுண்ணறிவு சட்டத்தில் புதிய மாற்றங்கள்
கனடாவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான சட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் செயற்கை நுண்ணறிவு அமைச்சர் இவன் சாலமன் (Evan Solomon) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தனியுரிமைச் சட்ட மூலத்தில், செயற்கை நுண்ணறிவு சாட்பொட்ஸ் தொடர்பாக வயது வரம்பு விதிகள் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது என கூறியுள்ளார்.

கட்டுப்பாட்டு சட்டம்
இது குழந்தைகளை இணையத்தில் பாதுகாக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், டீப் ஃபேக் (Deepfake) எனப்படும் போலி காட்சிகளை நீக்குவதற்கான உரிமையும் சட்டத்தில் சேர்க்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவுக்கான பரந்தளவிலான கட்டுப்பாட்டு சட்டத்தை தற்போது ஆதரிக்கவில்லை என்றாலும், அவசரமான மற்றும் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கத் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவுக்கான புதிய AI கொள்கையை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிபுணர்கள் குழுவினரிடமிருந்தும், மற்றும் பொது மக்களிடமிருந்தும் கருத்துக்களை பெற்றுக்கொள்வதில் திறந்த மனப்பான்மையுடன் உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில், இதுவரை 6,500க்கும் மேற்பட்ட கனடியர்கள் மத்திய அரசின் ஆலோசனையில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளதாக அமைச்சர் சாலமன் தெரிவித்தார்.