பிரான்ஸ் 102 மில்லியன் டொலர் நகைத் திருட்டுடன் தொடர்புடையவர்கள் கைது
பிரான்ஸின் பாரிஸ் லூவர் அருங்காட்சியகத்தில் அண்மையில் இடம்பெற்ற மதிப்புமிக்க நகை திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பலரை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அதிகாரிகள் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரை பாரிஸ் சார்ல்ஸ் டி கோல் விமான நிலையத்தில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது பிடித்ததாக கூறப்படுகிறது.
அந்த நபர் அல்ஜீரியாவுக்கு விமானம் ஏறத் தயாராகியிருந்தபோது கைது செய்யப்பட்டார். பின்னர் இன்னொருவர் பாரிஸ் பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விரிவான நடவடிக்கை
இருவரும் 30 வயதினரான இளம் ஆண்கள் எனவும், பாரிஸின் Seine-Saint-Denis பகுதியைச் சேர்ந்தவர்களாகவும், முன்பு பிரான்ஸ் காவல்துறைக்கு அறியப்பட்டவர்களாகவும் உள்ளனர். இவர்கள் மீது குற்றசங்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த திருட்டு மற்றும் குற்றச் சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த நடவடிக்கை பிரான்ஸ் காவல்துறையின் எதிர் கும்பல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடபப்டுகின்றது.
கடந்த 19 திகதி காலை நேரத்தில், உலகின் மிகப் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில், கொள்ளையர்கள் வெறும் நான்கு நிமிடங்களில் எட்டு அரிய நகைகளை கொள்ளையிட்டுச் சென்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்த நகைகளின் மொத்த மதிப்பு சுமார் 102 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அவற்றின் பண்பாட்டு மதிப்பு அளவிட முடியாதது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது பல விசாரணையாளர்கள் இணைந்து விரிவான வேட்டை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விசாரணையில் பொதுமக்கள் மற்றும் தனியார் பாதுகாப்பு கேமராக்களின் காட்சிகள், மேலும் பல டிஎன்ஏ மற்றும் விரல் ரேகைகள் வழியாக சந்தேகநபர்களை கண்டறிய முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தைரியமான திருட்டு சம்பவம் பிரான்சில் கலை மற்றும் பண்பாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பு நிலைமை குறித்த பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.