தென் கொரியாவில் எதிர்வரும் ஏழு நாட்களுக்கு துக்க தினம்
தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் பெங்கொக் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து அங்கு எதிர்வரும் ஏழு நாட்களுக்கு தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதன்படி, அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரை கொடிக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில், குறித்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 179 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி, தென்கொரிய - முவான் சர்வதேச விமான நிலைய சுற்று சுவரில் மோதியதை அடுத்தே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது மோதியதை அடுத்து விமானம் தீப்பற்றியதனாலேயே அதிக அளவிலான உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். இதன்படி, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்
அத்துடன், தென் கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் தாம் மிகுந்த வருத்தம் அடைவதாக பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், விமானம் விபத்துக்குள்ளான போது, குறித்த விமானத்தில் மொத்தமாக 181 பேர் இருந்ததாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் தென் கொரியாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
பாரிய பறவை ஒன்று தாக்கியதாகவும், மோசமான வானிலையே விபத்திற்கான காரணம் என தீயணைப்பு துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. எப்படியிருப்பினும், உறுதியான காரணத்தை அறியும் நோக்கில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் பதில் ஜனாதிபதி சோய் சாங்-மோக் விபத்து நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் மீட்பு பணி நடவடிக்கைகளுக்கு சகல வளங்களையும் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக ஜனாதிபதியின் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.