இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்; கலகத் தடுப்பு பொலிஸாரும் ஆயத்த நிலையில்
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்தூவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலகத்தடுப்பு பொலிஸாரும் நாடு முழுவதிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு முடியும் வரையில் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் ஒரு வார காலத்திற்கு வாகனப் பேரணிகள் மற்றும் மக்கள் பேரணிகள் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.
அனைத்து பிரஜைகளும் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சட்டத்தை மதித்து அமைதியான முறையில் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தக் கூடிய ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் 119, 118 மற்றும் 107 ( வடக்கு கிழக்கு) ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 011 202 7149, 011 201 3243ஆகிய இலக்கங்களுக்கு தொலைபேசி மூலம் 111 239 9104 என்ற தொலைநகல் இலக்கத்திற்கும் அறிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.