இலங்கையில் இடம்பெற்றது படுகொலையில்லை இனஅழிப்பு; கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்
இலங்கையில் இடம்பெற்றது படுகொலைகள் மாத்திரமல்ல இனஅழிப்பு என தெரிவித்துள்ள கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியியர்(Pierre Poilievre,) ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது.
அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப அனுமதிக்க கூடாது என (Pierre Poilievre ) தெரிவித்துள்ளார் . முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் (Pierre Poilievre ) மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலை
வரலாற்றை திரும்பிப்பார்க்கும் அனைவரும் பெருமிதமான தருணங்களையும் வலிமிகுந்த தருணங்களையும் நினைவுகூருவார்கள். தமிழ் இனப்படுகொலை நினைவுநாளில் கடந்த நூற்றாண்டின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றான தமிழ் இனப்படுகொலை குறித்து எங்கள் எண்ணங்களை திருப்புகின்றோம்.
பல தசாப்தங்களாக இலங்கை வன்முறையாலும் இரத்தக்களறியாலும் பாதிக்கப்பட்டது,ஏற்கனவே பல வருடங்களாக துயரங்களை அனுபவித்த நிலையில் 2009 மே மாதம் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமை ,தனித்துவமான பயங்கரம் மற்றும் ஈவிரக்கமற்ற தன்மை ஆகியவற்றின் தருணமாகும்.
இது வெறுமனே படுகொலையில்லை இது இனஅழிப்பு 16 வருடங்களிற்கு பின்னர் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவுகூருகின்றோம், நீதிக்கான அவசர தேவையை அங்கீகரிக்கின்றோம்.
ராஜபக்ச அரசாங்கத்தின் யுத்த குற்றங்களை ஒருபோதும் மறக்ககூடாது.அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டனையின்றி தப்ப அனுமதிக்க கூடாது.
கனடா வலுவான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,பொறுப்;புக்கூறலை கோரவேண்டும். கனடா யுத்தகுற்றவாளிகளிற்கான புகலிடமாக ஒருபோதும் விளங்ககூடாது.
தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் உண்மையான விளைவுகளை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கு கென்சவேர்ட்டிவ் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கும்.
கனடாவில் உள்ள தமிழ் சமூகம் நம்பமுடியாத மீள் எழுச்சி தன்மையை வெளிப்படுத்தியுள்ளது வேதனையை வலிமையாக மாற்றியுள்ளது,எங்கள் நாட்டை வளப்படுத்தியுள்ளது.
இந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் நினைவுகூரும் இந்த தருணத்தில் அனைவருக்கும் நீதி மற்றும் சமாதானத்திற்கான எங்கள் அர்ப்பணிப்பை மீளவலியுறுத்துகின்றோம்.
எங்கள் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் ராஜபக்ச அரசாங்கத்தை எதிர்த்துநின்றார் என்பது குறித்து நான் பெருமிதம் அடைகின்றேன்.
நான் ராஜபக்ச அரசாங்கம் தங்கள் குற்றங்களிற்காக பதில் கூருவதை உறுதி செய்வதற்காக தொடர்ந்தும் போராடுவேன், சர்வதேச நீதிமன்றத்தில் அவர்களை பாரப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலியியர்(Pierre Poilievre ) குறிப்பிட்டுள்ளார் .