உலகக் கிண்ணப்போட்டியில் முதல் வெற்றியைப் பதிவு செய்த இலங்கை
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டக்வர்த் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
204 ஓட்டங்களை வெற்றி இலக்கை கொண்டு களம் இறங்கிய சிம்பாப்வே அணியின் இன்னிங்ஸ் மழையால் தடைபட்டது.
இதனால் டக்வர்த் லூயிஸ் முறைப்படி 22 ஓவர்களில் 129 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணியின் வலுவான பந்துவீச்சினால் சிம்பாப்வே அணியால் 21 ஓவர்கள் 1 பந்தில் 89 ஓட்டங்கள் மட்டுமே பெற முடிந்தது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் மல்ஷா தருபதி 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48 ஓவர்கள் 3 பந்துகளில் 204 ஓட்டங்களைப் பெற்றது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய தினுர 55 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 60 ஓட்டங்களைப் பெற்றார்.
இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காமல் சண்முகநாதன் 3 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.