டிரம்பின் வரிக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி முடிவு ; இறக்குமதியாளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் மீள்கொடை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த அதீத வரி நடவடிக்கையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பெரும் தொகை மீள வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு அதிகளவிலான வரிகளை விதித்தார்.

இந்த வரி நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவின் சில மாகாணங்களும், பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், குறித்த அளவிலான அதீத வரிகளை விதிக்கும் அதிகாரம் அதிபருக்கு இல்லை என தீர்ப்பளித்ததுடன், டிரம்ப் நிர்வாகம் விதித்த வரிகளை ரத்து செய்தது.
மேலும், அந்த வரிகளின் மூலம் இறக்குமதியாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணத்தை மீள வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, மொத்தமாக வசூலிக்கப்பட்ட 15.77 லட்சம் கோடி ரூபாய் தொகையில், இதுவரை சுமார் 60 சதவீதமான 9.50 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதியாளர்களுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு, உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மீதமுள்ள தொகைகளை திருப்பி வழங்குவதற்கான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அவையும் விரைவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.