உக்ரைன் தாயாருக்கு பிறந்த கனேடிய குழந்தை... பெற்றோருக்கு கிடைத்த மகிழ்ச்சியான தகவல்
உக்ரேனிய வாடகைத்தாய்க்கு பிறந்த கனேடிய குழந்தை ஒன்று பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கண்மூடித்தனமான தாக்குதலை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. முக்கிய நகரங்களை குண்டுவீச்சால் சிதைத்து வருவதுடன், உக்ரைன் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக ரஷ்ய துருப்புகள் உருக்குலைத்தும் வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க தொண்டு நிறுவனம் ஒன்றின் உதவியுடன், பிறந்து 8 நாட்களேயான பச்சிளம் குழந்தை ஒன்று, உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து மீட்கப்பட்டு, கனடாவில் அதன் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கனேடிய தம்பதிக்கு உக்ரைன் வாடகைத்தாய் மூலம் பிறந்த அந்த குழந்தையை மீட்க தொண்டு நிறுவனத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா படையெடுப்பை முன்னெடுக்கும் முன்னர் உக்ரைன் நாடானது உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக வாடகைத் தாய்களைத் தேடும் பிரபலமான இடமாக இருந்து வந்தது.
ஆனால், கொரோனா பரவல், தொடர்ந்து ரஷ்ய படையெடுப்பு என அடுத்தடுத்த சிக்கல்கள் ஏற்பட்டது. மட்டுமின்றி, பிறந்த குழந்தைகளை உரிய பெற்றோரிடம் ஒப்படைக்கவும் முடியாமல் போனது.
இந்த மாத தொடக்கத்தில், இரட்டை அமெரிக்க குழந்தைகளையும், ஒரு பிரித்தானிய குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டுள்ளனர். மட்டுமின்றி செவ்வாயன்று மற்றொரு அமெரிக்க குழந்தையும் தொண்டு நிறுவனக் குழுவால் மீட்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் சுமார் 10 மில்லியன் மக்கள் உக்ரைனை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட அமெரிக்க தொண்டு நிறுவனம் சார்பில் இதுவரை 215 ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 14,000 பேர்கள் மீட்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.