இறுகும் நெருக்கடி... பின்லாந்து பெண் பிரதமர் முக்கிய அறிவிப்பு
பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் விருந்து ஒன்றில் நடனமாடும் வீடியோ வெளியானதை தொடர்ந்து தாம் போதைப்பொருள் சோதனையை எடுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக சன்னா மரீன்(36) பதவி வகித்து வருகிறார். உலகின் மிக இளவயது பிரதமர் என கொண்டாடப்பட்டுவரும் சன்னா மரின் சமீபத்தில் தனிப்பட்ட விருந்து ஒன்றில் நடனமாடும் காணொளி காட்சி ஒன்று வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த திட்டமிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மரீன் விருந்தில் போதைப்பொருள் உட்கொண்டதாக குற்றஞ்சாட்டின.
ஆனால் அந்தக் குற்றச்சாட்டிற்கு மரீன் முற்றாக மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பிரதமர் சன்னா மரீன் வெள்ளிக்கிழமை தன்னை போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, தாம் இதுவரை ஒருபோதும் சட்டவிரோதமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியது இல்லை எனவும் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்யா தொடர்பில் பின்லாந்தில் திடீர் நெருக்கடி ஏற்பட்டால், அவரது விருந்து கொண்டாட்டங்கள் அவரது கடமைகளை விரைவாக நிறைவேற்றுவதில் தலையிடக்கூடும் என்ற விமர்சனத்தையும் மரீன் எதிர்கொண்டார்.
ஆனால் அவ்வாறான நெருக்கடி நிலை ஏற்பட்டால், அதை சமாளிக்கும் நுணிவு தமது அரசுக்கு இருப்பதாகவும் பிரதமர் சன்னா மரீன் பதிலளித்துள்ளார். மேலும், பின்லாந்தின் ராணுவம் அவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.