மலேசியாவில் கௌரவிக்கப்பட்ட தமிழும் தமிழர்களும் !
மலேசியாவின் 'பேரா' மாநிலத்தில் அமைந்தது 'ஈப்போ' நகரம். ஈப்போ நகரம் சுத்தத்திற்கும் குறைந்த வாழ்க்கைச் செலவிற்கும் பிரசித்தி பெற்றது. ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றம் கடந்த 22 வருடங்களாக தமிழ்ப் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
"எங்கும் தமிழ் எதிலும் தமிழ்" என்ற பிரகடன வாசகத்துடன்(கருப்பொருளுடன்) தன் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த அமைப்பினால் இதுவரை மூன்று அனைத்துலக பன்னாட்டு மகாநாடுகள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. இந்த அமைப்பின் தற்போதைய தலைவராக கவிஞர் வனிதா தினகரன் பணியாற்றி வருகிறார்.
பல்வேறு நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்ற நிகழ்வு
ஈப்போ முத்தமிழ் பாவலர் மன்றத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான "பன்னாட்டுத் தமிழ் எழுத்தாளர் தொடக்க மாநாடு" கடந்த யூலை மாதம் 21 ஆம் திகதி ஈப்போ நகரில் தமிழ் உலகம் வியக்கும் படியாக ,சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இம் மாநாட்டிற்கான ஏற்பாட்டுக் குழுவுக்கு டாக்டர் அருள் ஆறுமுகம் கண்ணன் தலைமை ஏற்று நடத்தினார். இம் மகாநாட்டிற்காக இந்தியா,இலங்கை, சிங்கப்பூர்,மொறீசியஸ்,பிரித்தானியா, பிரான்சு முதலிய பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் வந்திருந்தனர்.
மலேசியாவிலும், பிற நாடுகளிலும் தமிழுக்கும்,சமூகத்திற்கும் பணி செய்யும் சான்றோர்கள் பலர் கௌரவிக்கப் பட்டனர்.அவர்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டன.
பல்வேறு கலை நிகழ்வுகளும் சிறப்பாக நடைபெற்றன.பன்னாட்டு எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி ஒன்றும் நடைபெற்றது. இம் மகாநாட்டில் பன்னாட்டு தமிழ் எழுத்தாளர்கள் எழுதிய " பன்னாட்டு சிறுகதை களஞ்சியம்" எனும் மூன்று தொகுப்பு நூல்களும் வெளியிடப்பட்டன.
இந் நூல்களில் 148 எழுத்தாளர்களின் படைப்புகளும்,50 இற்கு மேற்பட்ட மலேசிய பல்கலைக்கழக மாணவர்களின் படைப்புகளும்இடம்பெற்றிருந்தன. இம் மகாநாட்டினை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இம்மலருக்கு மலேசிய அமைச்சர்கள்,மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்,பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள்,முன்னாள் அமைச்சர்கள்,தமிழ் நாடு காமராசர் அறக்கட்டளையின் நிறுவுநர்,மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் மோகனன் பெருமாள் முதலிய பலரும் வாழ்த்துச் செய்திகளை வழங்கியிருந்தனர்.
தக்கார் சிறப்பு விருதுகள் 14 எழுத்தாளர்களுக்கு வழங்கப் பட்டன. மலேசிய எழுத்தாளர்களான பேராசிரியர் முனைவர் மாரி சச்சிதானந்தம்,தமிழ்மணி முனைவர் சி.வடிவேலு,தமிழ்த்திரு.சைமன் ஞானமுத்து,ஈப்போ சரளாஸ்ரீ,சிவா லெனின்,முருகு மாதவன், தி.தாயுமானவன்,பெ.கந்தசாமி ,முனியாண்டி சண்முகம் ஆகியோர் "தக்கார் விருது" பெற்றனர்.
தமிழக எழுத்தாளர் டாக்டர் LTR இளைய கட்டப்பொம்மன்,விசாகன் மயிலாச்சலம் ஆகியோர் தக்கார் விருது பெற்றனர்.சிங்கப்பூரில் இருந்து வந்த முனைவர் இலக்குமி மீனாட்சி சுந்தரம் தக்கார் விருது பெற்றார்.
அதேவேளை இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கவிஞர் இரா.ஜெயக்குமாரும் தக்கார் விருதுபெற்றார். அத்துடன் மியான்மாரில் இருந்து வந்த எம்.ஜி.குமார், இவ்விருதினை பெற்றுக்கொண்டார்
இந்த வகையில் மலேசியா வாழ் தமிழர்களின் எழுச்சியை காட்டுவதாக இவ்விழா அமைந்தது.