கால்பந்து விளையாட்டில் சேர்க்காததால் - 14 வயது சிறுவன் மற்றும் பெண் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள கிராண்ட் ரேபிட்ஸ் (Grand Rapids) பகுதியில், விளையாட்டில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்ட இளைஞர் ஒருவரை மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், 14 வயது சிறுவன் மற்றும் ஒரு பெண் ஆகியோரை அந்த இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுத்வெஸ்ட் எலிமெண்டரி பள்ளிக்கு அருகில் உள்ள மைதானத்தில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் குழுவாக இணைந்து கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த 18 வயது இளைஞர் ஒருவர், தானும் விளையாட்டில் பங்கேற்பதாகக் கேட்டுள்ளார்.
இருப்பினும், அங்கிருந்தவர்கள் அவரை விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், அங்கிருந்தவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த 14 வயது சிறுவனை நோக்கிச் சுட்டுள்ளார். சிறுவன் சுடப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஒரு பெண்மணி, அந்த இளைஞரைத் தடுத்து நிறுத்தவும் சிறுவனுக்கு உதவவும் முயன்றுள்ளார்.
அப்போது அந்த இளைஞர் அந்தப் பெண்ணையும் குறிவைத்துச் சுட்டதில், அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அங்கே குறைந்தது ஏழு அல்லது எட்டு சிறுவர்கள் இருந்தனர். இந்த கொடூரமான சம்பவத்தை அவர்கள் நேரில் பார்த்துள்ளனர்.
எவருக்கும் இது ஒரு பயங்கரமான காட்சி, குறிப்பாகச் சிறுவர்களுக்கு இது மிகப்பெரிய மன உளைச்சலைத் தரும் என்று கிராண்ட் ரேபிட்ஸ் இடைக்கால காவல் துறைத் தலைவர் ஜோ ட்ரிக் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய பின் அங்கிருந்து தப்பியோடிய 18 வயது இளைஞரை, போலீஸார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர். உயிரிழந்தவர்களின் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் பள்ளிக்கு அருகிலேயே நடந்ததாலும், சமூகத்தில் நிலவும் அச்சத்தைப் போக்கவும், அப்பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.