ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம்; ஏவுகணைகளால் ஈரான் பதிலடி
ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாகவும் ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் ஒளிபரப்பு நிறுவனம் ஒன்று, இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானிய எண்ணெய் கப்பல் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கிருந்த "எதிரிப் படைகள்" மீது ஈரான் ஏவுகணைகளை ஏவிப் பதிலடி கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிரிப் படைகள் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவி பதிலடி
இந்தத் தாக்குதலில் எதிரிப் படைகளின் இலக்குகள் சேதமடைந்ததை அடுத்து, அவை அந்தப் பகுதியை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) மற்றும் கெஷ்ம் தீவு (Qeshm island) பகுதிகளில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கெஷ்ம் தீவு பகுதியில் கேட்கப்பட்ட வெடிப்புச் சத்தங்கள், வான் பாதுகாப்பு அமைப்பினால் இடைமறிக்கப்பட்ட சிறிய ரக ஆளில்லா வானூர்திகளால் ஏற்பட்டவை என மிசான் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
பண்டார் அப்பாஸ் பகுதியில் வான் பாதுகாப்புப் படையினரால் இரண்டு ஆளில்லா வானூர்திகள் சுட்டுவீழ்த்தப்பட்டதாக தஸ்நிம் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடி மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், இந்தப் பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.