தாய்லாந்து – கம்போடியா மோதல் ; பிரித்தானியா பயண எச்சரிக்கை
தாய்லாந்தின் தெற்கு மாகாணங்கள் மற்றும் கம்போடியாவின் எல்லை பகுதிகளுக்கு செல்லும் தனது பிரஜைகளுக்கு பிரித்தானியா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாய்லாந்து – கம்போடியா நாடுகளுக்கு இடையில் நிலவும் மோதல்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக பயணிகள் அவற்றை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள்
தாய்லாந்தின் தெற்கு பகுதிகளில் சமீப காலங்களில் தீவிர வன்முறைகள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, படைவீரர்கள் மற்றும் பிரத்தியேக பிரிவுகளுக்கு இடையில் நிலவும் மோதல்கள் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கியுள்ளன.
இது சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. அதே நேரத்தில், கம்போடியாவின் எல்லை பகுதிகளிலும் கடுமையான எல்லை பாதுகாப்பு நடவடிக்கைகள், உள்ளக அரசியல் குழப்பங்கள் மற்றும் சில இடங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் காணப்படுகின்றன.
இதனால் அந்த பகுதிகளில் பயணிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என அந்நாட்டு பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ”அவசர காரணங்கள் இல்லாதவர்கள் பயணத்தைத் தவிர்க்குமாறும், அவசர தேவை ஏற்பட்டால் மட்டுமே அங்கே செல்லவும் பிரித்தானிய அரசு, தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பயணிகள் தங்கள் பாதுகாப்புக்கு முழு கவனம் செலுத்தி, உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரித்தானியா தனது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.