கடைசி நேரத்தில் டிரம்பின் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவுக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசா தடையை, அதிபர் டிரம்ப் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்தாண்டு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா. இதுவரை அந்நாட்டில் இரண்டு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல 3.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுதவிர அந்நாட்டில் இருக்கும் பல கோடி பேர் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக வேலையிழந்தனர்.
நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு, புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும்போது அது அமெரிக்கர்களுக்கு முதலில் கிடைக்க வேண்டும் என்றும் கூறிய டிரம்ப் அதை உறுதி செய்யும் வகையில் பல புதிய விசா கட்டுப்பாடுகளை அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் இந்தக் கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தார். இதனால் அமெரிக்காவில் "கிரீன் கார்டு" பெற விண்ணப்பித்திருந்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல தொழிலாளர் விசா உள்ளிட்ட பல தற்காலிக விசாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவுகள் வரும் நேற்றுடன் காலாவதியாக இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் அதிபர் டிரம்ப் இந்தத் தடை உத்தரவுகளை மூன்று மாதங்கள், அதாவது வரும் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்தத் தடை நீட்டிப்பு காரணமாக அந்நாட்டில் இருக்கும் பல்வேறு தொழில்துறைகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கும் ஜோ பைடன், இந்தக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆனால் அதிபராகப் பொறுப்பேற்றவுடன் இந்தக் கட்டுப்பாடுகளை ரத்து செய்வாரா என்பது குறித்து தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவில் தற்போது சுமார் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வேலையின்றி இருக்கிறார்கள். இவர்கள் தற்போது அரசின் உதவிகளைப் பெற்று வருகின்றனர்.
முன்னதாக, வெளிநாடுகளிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு வகை விசாக்களுக்கு டிரம்ப் விதித்திருந்த தடை உத்தரவை கலிபோர்னியா நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் ரத்து செய்திருந்தது.