ஜப்பானில் 7 பேரைக் கொன்ற ஆடவருக்கு மரண தண்டனை!
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் 2008ஆம் ஆண்டு 7 பேரைக் கொன்ற ஆடவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
டோமோஹிரோ காட்டோ (Tomohiro Kato) என்ற அந்த ஆடவர் தாக்குதலைக் கவனமாகத் திட்டமிட்டதாகவும், அவரது கொலை நோக்கம் தெளிவாகத் தென்பட்டதாகவும் அந்நாட்டின் நீதி அமைச்சர் கூறினார்.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் அனைத்து அம்சங்களும் கவனமாகக் கருத்தில் கொள்ளப்பட்டதாய் அவர் கூறினார்.
2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் தோக்கியோவின் பிரபல அகிஹபாரா (Akihabara) மாவட்டத்தில் காட்டோ அந்தக் கொலைகளைப் புரிந்தார்.
கூட்டத்துக்கு இடையே இரு டன் எடை கொண்ட கனரக வாகனத்தைச் செலுத்தி, மக்களை இடித்துத் தள்ளி, பின் அதிலிருந்து இறங்கி, காண்போரை எல்லாம் கத்தியால் குத்தினார். இச்செயலை தனிமை, வேலையின்மை ஆகியவற்றால் மனமுடைந்துப் போய் அவ்வாறு செய்ததாக அவர் கூறியிருந்தார்.
ஜப்பானை உலுக்கிய மோசமான அந்தச் சம்பவத்தை அடுத்து, 2011ஆம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. உலகளவில் இன்னமும் மரண தண்டனை விதிக்கப்படும் வளர்ந்த நாடுகளில் ஜப்பானும் ஒன்று.
உலக அளவில் எதிர்ப்புகள் இருந்தாலும், ஜப்பானிய மக்கள் மரண தண்டனை விதிக்கப்படுவதை ஆதரிக்கின்றனர்.