துருப்பிடித்து வரும் நிலவு ; ஆய்வில் வெளியான புதிய தகவல்
சீனாவின் மக்காவ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜிலியாங் ஜின் தலைமையிலான குழுவினர் நிலவின் மேற்பரப்பை பற்றி ஆய்வு மேற்கொண்டு விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.
அந்த ஆய்வில் நிலவுக்கும், பூமிக்கும் இடையே உள்ள ஆழ்ந்த தொடர்பை பற்றி அவர்கள் புரிந்து கொள்ள உதவியது.
அதுபற்றி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், நிலவுக்கு கெட்ட நிகழ்வு ஒன்று நடந்து வருகிறது.
நிலவின் மேற்பரப்பில், அதிலும் துருவ பகுதிகளில் ஹெமடைட் என்ற ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
இது ஒரு வகையான இரும்பு ஆக்சைடு ஆகும். நிலவு துருப்பிடிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதற்கு ஆக்சிஜன் மற்றும் தண்ணீர் தேவை. ஆனால், இவையிரண்டும் நிலவில் அதிகளவில் கிடையாது. அப்படியென்றால் இதற்கு அடிப்படையாக என்ன இருக்கும்? இதற்கான விடையை அவர்கள் அந்த அறிக்கையில் அளித்துள்ளனர்.
இந்த துருப்பிடித்தலுக்கு பூமியே காரணம். பூமியின் வளி மண்டலத்தில் இருந்து காற்றானது நிலவுக்கு பயணித்து இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை.
இதனை அவர்கள் ஆய்வகத்தில் செயற்கையான முறையில் பரிசோதனை செய்து கண்டறிந்து உள்ளனர்.
இந்தியாவின் சந்திரயான்-1 திட்டத்தின்போது, நிலவின் துருவ பகுதிகளில் ஹெமடைட் இருந்தது என கண்டறியப்பட்டது.
இதனை விஞ்ஞானிகள் முன்பே அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த துருப்பிடித்தலை புரிந்து கொள்வதன் வழியே வருங்கால நிலவு தொடர்பான திட்டங்களில் அது தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.