ஐரோப்பிய நாடொன்றில் 3 மகள்களுக்கு எமனாகிய தாய்!
ஐரோப்பிய கிரீஸ் தலைநகர் ஏதன்ஸில் 34 வயதுப் பெண் அவரது 3 மகள்களைக் கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதுகுறித்த வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. திட்டமிட்டுத் தனது மூத்த மகளைக் கொலை செய்ததாக ரோலா பிஸ்பிரிகோவ் (Roula Pispirigiy) என்ற பெண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ரோலா மறுத்துவிட்டார். மூத்த மகளான 9 வயது ஜார்ஜினாவுக்கு ரோலா சென்ற ஆண்டு ஜனவரியில் கெட்டமின் (ketamine) எனும் நச்சுப்பொருளை அளித்ததாக நம்பப்படுகிறது.
ஜார்ஜினா 2022 ஜனவரி 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். சென்ற மார்ச் மாதத்தில் கைதுசெய்யப்பட்ட பிஸ்பிரிகோவ் தான் நிரபராதி என்று கூறுகிறார்.
அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அதிகாரிகள் அவரது மற்ற 2 மகள்களின் மரணம் குறித்தும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
2019 ஆம் ஆண்டில் 3 வயது மகள் மாலெனா (Malena), 2021ஆம் ஆண்டில் 6 மாதக் குழந்தை ஐரிஸ் (Iris), 2022ஆம் ஆண்டில் 9 வயது ஜார்ஜினா ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இளைய மகள்கள் இருவரும் எப்படி உயிரிழந்துள்ளனர் என்பதைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டது.
இச்சம்பவத்தின் விசாரணை தொடர்கிறது என்றாலும், அந்த 2 மகள்களின் மரணத்துக்கும் பிஸ்பிரிகோவ் தான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.