சிங்கிள் டோஸே இல்லை; இதில் பூஸ்டர் டோஸ்களா? உலக சுகாதார அமைப்பு கண்டனம்
லட்சக்கணக்கான மக்கள் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிகூட கிடைக்காமல் உள்ளபோது, பூஸ்டர் டோஸ்களை வழங்க பணக்கார நாடுகள் அவசரப்படுவதை உலக சுகாதார அமைப்பு கண்டித்துள்ளது.
வளர்ச்சியடையாத நாடுகளில் இன்னமும் கொரோனா தடுப்பூசிகள் சிங்கிள் டோஸ் கூட செலுத்த முடியாத நிலையில், ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ் , பிரிட்டன் ஆகிய நாடுகள் பூஸ்டர் டோஸ்களுக்கு தயாராகி வருகின்றன.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில்,
'ஏற்கனவே உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் வைத்திருக்கும் மக்களுக்கு கூடுதல் லைஃப் ஜாக்கெட்டுகளை வழங்க திட்டமிட்டு வருகிறோம். அதே வேளையில் ஒரு லைஃப் ஜாக்கெட் கூட இல்லாமல் மக்களை தவிக்க விட்டுள்ளோம்.
லட்சக்கணக்கான மக்கள் சிங்கிள் கொரோனா தடுப்பூசியை கூட போடவில்லை. ஆனால் பணக்கார நாடுகள் பூஸ்டர் டோஸ்களுக்கு அவசரப்படுகின்றன' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ள நுஇலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது.
அதேசமயம் கொரோனா பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் உலகளவில் இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.