இது பழிவாங்கலின் அறிவிப்பு ; ட்ரம்ப் தரப்பு வெளியிட்டுள்ள தகவல்
அமெரிக்க ராணுவம் சிரியாவில் ஐ.எஸ்., பயங்கரவாதிகளை குறிவைத்து மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தாக்குதல் மேற்காசிய நாடான சிரியாவின் பால்மிரா அருகே கடந்த 13ம் திகதி ஐ.எஸ்., பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட மூன்று அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பொறுப்பானவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
அதன்படி, சிரியாவில், 'ஆப்பரேஷன் ஹாவ்க்கி' என்ற பெயரில் அமெரிக்கா தாக்குதலை துவங்கி உள்ளது. போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு, மத்திய சிரியாவில் 70க்கும் மேற்பட்ட ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் இலக்குகள் நேற்று தாக்கப் பட்டன.
இதில், 100க்கும் மேற்பட்ட துல்லியமான ஆயுதங்கள் பயன் படுத்தப்பட்டன. இது குறித்து அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்ஸெத் கூறுகையில், ''இது போரின் துவக்கம் அல்ல - இது பழிவாங்கலின் அறிவிப்பு.
''அதிபர் டிரம்ப் தலைமையின் கீழ், அமெரிக்கா, தன் மக்களை பாதுகாக்க ஒருபோதும் தயங்காது, ஒருபோதும் பின்வாங்காது,'' என்றார். பயங்கரவாதிகளின் மீதான தாக்குதலை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டி உள்ளார்.