திருமண வாழ்க்கையை சிதைத்த பெண்ணுக்கு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவின் வட கரொலினா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர், திருமணமான ஆணுடன் உறவு வைத்ததால் ஒரு தம்பதியரின் திருமண வாழ்க்கை சிதைந்ததாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனால் 1.75 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டர்ஹாம் (Durham) கவுண்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ப்ரெனே கெனார்ட் (Brenay Kennard) எனும் டிக்டாக் (TikTok) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) பிரபலமான பெண், தன்னுடைய முகாமையாளருடன் டிம் மொன்டாக்யூ (Tim Montague) உடன் உறவு வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

முகாமையாளரான டிம் மொன்டாக்யூவின் மனைவி அகிரா மொன்டாக்யூ (Akira Montague) இந்த வழக்கை தொடர்ந்திருந்தார்.
கணவரையும் குழந்தைகளின் தந்தையையும் இழந்த பிறகு, இத்தீர்ப்பு அவருக்கு நீதி அளிக்கிறது என குறித்த பெண்ணின் சட்டத்தரணி ரோபோனெட்டா ஜோன்ஸ் (Robonetta Jones) கூறுகையில் தெரிவித்துள்ளார்.
ப்ரெனே கெனார்ட் மீது குற்றவியல் மற்றும் அன்பை பிரித்தல் உள்ளிட்ட சில சட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
வட கரொலினா மாநிலத்தின் அன்பை பிரித்தல் (Alienation of Affection) சட்டத்தின் கீழ், தங்களது திருமணத்தை உடைத்த மூன்றாவது நபரை எதிர்த்து, பாதிக்கப்பட்ட துணை வழக்கு தொடர முடியும்.
இது இன்னும் சில மாநிலங்களில் மட்டுமே நடைமுறையில் உள்ள சட்டமாகும். வழக்கில் குறிப்பிடப்பட்டபடி, அகிரா மற்றும் டிம் மொன்டாக்யூ ஆகியோர் 2018 அக்டோபர் 20 அன்று திருமணம் செய்துகொண்டனர்.
பின்னர், டிம் மற்றும் ப்ரெனே கெனார்ட் இடையே ஏற்பட்ட உறவு, திருமணத்தை சிதைத்ததாக அகிரா கூறியுள்ளார். அவர் மன உளைச்சலுக்கு, உடல் நல பாதிப்புக்கு, மற்றும் குழந்தைகள் இருவரும் பெற்றோர் பராமரிப்பு இழந்ததற்கும் இழப்பீடு கோரியிருந்தார்.