பிரான்சில் சூறாவளி தாக்குதல் ; கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயம்
பிரான்ஸின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக கர்ப்பிணி பெண் உட்பட 41 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 15 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்மேற்கு பிரான்ஸின் பொமாஸ் கிராமத்தில் நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் மணிக்கு 117 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றுடன் சூறாவளி வீசியுள்ளது.

சுமார் 1,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமம் சூறாவளியின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், சுமார் 300 வீடுகள் சேதமடைந்துள்ளன.
மேலும், பல மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளதோடு, பல வாகனங்களும் சேதமடைந்துள்ளன.
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முன்னெடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன்போது காயமடைந்த 41 பேர் மீட்கப்பட்ட நிலையில், கர்ப்பிணி பெண் உட்பட 15 பேர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பைரனீஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட ஆலங்கட்டி மழை காரணமாக தென்மேற்கு பிரான்ஸில் நடைபெறவிருந்த வுல்டா எஸ்பானா சைக்கிள் பந்தயமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், போர்டோ, மார்சேய், நைஸ் மற்றும் துலூஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கடுமையான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகளும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த அனர்த்தம் தென்மேற்கு பிரான்ஸில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.