மணன் பத்மநாதன் என்ற கனடியருக்கு அமெரிக்காவில் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக 145க்கும் மேற்பட்ட சிறுவர்களை இணையவழியில் பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டொராண்டோவைச் சேர்ந்த நபருக்கு, அமெரிக்க நீதிமன்றம் 30 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கொலம்பியா மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.
ரமணன் பத்மநாதன் (40) என்ற இந்த நபர், ஒரு பாரிய இணையவழி பாலியல் மிரட்டல் திட்டத்தின்" பின்னணியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைத்தண்டனை முடிவடைந்த பிறகு, அவர் 10 ஆண்டுகள் அதிகாரிகளின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கனடாவில் அவர் ஏற்கனவே அனுபவித்து வரும் 12 ஆண்டு சிறைத்தண்டனையுடன், இந்த புதிய தண்டனையும் தொடர்ச்சியாகச் சேர்க்கப்படும் என்று அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
டொராண்டோ காவல்துறையினர் ரமணன் பத்மநாதனைக் கைது செய்து, 93 பாலியல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். அடுத்த ஆண்டே அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அமெரிக்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். சிறுவர் ஆபாசப் படம் தயாரித்தல் மற்றும் சிறுவர்களை வற்புறுத்தி தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.
இந்தக் குற்றவாளி பல ஆண்டுகளாக இணையத்தில் திட்டமிட்டு குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, மார்ச் 2014 முதல் மார்ச் 2021 வரை, பத்மநாதன் பல சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்தி குறைந்தது 145 சிறுவர் மற்றும் சிறுமிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். நியூஜெர்சியைச் சேர்ந்த ஒரு பதின்ம வயது சிறுவன் போல நடித்து இந்தத் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார்.
வீடியோ சாட்களின் போது பாதிக்கப்பட்ட சிறுவர்களை பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபடுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும், பெரியவர்களின் பாலியல் படங்களை அனுப்பி, அவர்களை அவ்வாறு செய்ய தூண்டியுள்ளார்.
சிறுவர்கள் தங்களது செயல்களைப் பதிவு செய்த கோப்புகளை அவர் தனது கணினியில் சேமித்து வைத்துள்ளார்.
சிறுவர்கள் இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் போதோ அல்லது அவரது கணக்குகளை முடக்கும் போதோ, அந்தப் படங்களை அவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரமணன் பத்மநாதனுக்கு அமெரிக்க நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.