ஒரே ஒரு ஆமையால் ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்ட ரயில் சேவை!
பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள நோர்விச் மற்றும் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையம் இடையிலான ரயில்கள் நேற்று முன்தினம் நண்பகலில் பாதி வழியில் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் தண்டவாளத்திலேயே காத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தண்டவாளத்தில் சில விலங்குகள் இருந்ததால் ரயில் சேவை முடங்கியதாக ‘கிரேட்டர் ஆங்கிலியா’ ரயில்வே நிறுவனம் முதலில் ட்வீட் செய்திருந்தது. பின்னர், ’ஒரு ராட்சத ஆமையால் ரயில்கள் நிறுத்தப்பட்டன’ என அந்நிறுவனம் தெரிவித்தது.
இதற்கிடையே பயணி ஒருவர், தண்டவாளத்தின் மீது ஆமை நிற்கும் படத்தை ட்விட்டரில் பதிவிட்டார். ‘கிரேட்டர் ஆங்கிலியா’ ரயில்வே நிறுவனத்தை டேக் செய்த அவர் ‘அந்த ஆமை உயிருடன் இருக்கிறது ஆனால் காயமடைந்திருக்கிறது’ எனத் தகவல் தெரிவித்தார்.
அத்துடன் அந்த ஆமையின் மேல் ஓட்டின் ஒரு பகுதி உடைந்திருந்தது தெரியவந்தது. அதன் பின்னர் அந்த ஆமை அங்கிருந்து தூக்கிச் சென்ற வனவிலங்கு நிபுணர் குழு, அதற்கு சிகிச்சை அளித்ததாகவும், விரைவில் அதன் காயம் ஆறிவிடும் என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் அருகில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திலிருந்து அந்த ஆமை தப்பித்துவந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதேசமயம் ஆமை பத்திரமாக மீட்கப்படும் வரை ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை விலங்கு ஆர்வலர்களுக்கு நெரிகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.