ட்ரம்ப் உடைத்த ரகசியம் ; ஹார்முஸ் வழியாக கோடிக்கணக்கான பீப்பாய் எண்ணெய் போக்குவரத்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரகசிய இராணுவ நடவடிக்கையின் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 10 கோடிக்கும் அதிகமான பீப்பாய் கச்சா எண்ணெய் திறந்த சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியில் கடந்த சில மாதங்களாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கடந்த மாதம் "புராஜெக்ட் பிரீடம்" என்ற பெயரில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையை அமெரிக்கா முன்னெடுத்ததாகவும், பின்னர் அது நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் எண்ணெய் டேங்கர்கள் மற்றும் வணிகக் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பு வழங்கும் ரகசிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டதாகக் கூறினார்.
அந்த நடவடிக்கையின் மூலம் ஒவ்வொரு இரவும் நூற்றுக்கணக்கான கப்பல்கள் வழியாக பெருமளவிலான கச்சா எண்ணெய் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த நடவடிக்கை குறித்து ஈரானுக்கு தெரியவில்லை என்றும், அவர்களால் அதனை கண்டறிய முடியவில்லை என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
எனினும், ட்ரம்ப் வெளியிட்டுள்ள இந்தக் கூற்றுகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்புத் துறை அல்லது பிற சுயாதீன தரப்புகளிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.