கனடாவில் விமானப் பயிற்சியில் ஈடுபட்ட இரு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
கனடாவில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த மனோஜ் சிவகுமார் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் உள்ள விமானப் பயிற்சி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான சிறிய ரக விமானத்தில் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எதிர்பாராத விதமாக விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த மனோஜ் சிவகுமார் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
இருவரின் உயிரிழப்புக்கு கனடாவின் வான்கூவரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்திய துணைத் தூதரகம் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கனடாவில் விமானப் பயிற்சியின்போது ஏற்பட்ட துயரமான விபத்தில் உயிரிழந்த தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இருவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த துயரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள துணைத் தூதரகம், அவர்களின் உடல்களை இந்தியாவுக்கு கொண்டு செல்வதற்குத் தேவையான அனைத்து வகையான தூதரக உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
விமான விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.