ரஷ்ய ஏவுகணை தாக்கியதில் போலந்தில் இருவர் உயிரிழப்பு!
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா, அந்நாட்டு முக்கிய பகுதிகளில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.
நேற்றைய தினம் ரஷ்ய துருப்புக்கள் குறைந்த பட்சம் 85 ஏவுகணைகளை வீசியதாகவும், அவற்றில் பெரும்பாலானவை உக்ரைன் மின் உற்பத்தி கட்டமைப்புகளை தாக்கியதில் பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
இருப்பினும், நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து இழந்த அனைத்தையும் மீட்டெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்கள் பழிவாங்கும் மற்றொரு முயற்சி என்றும், குளிர் காலத்திற்குள் உக்ரைன் மின் உற்பத்தி மற்றும் எரிசக்தி நிலைகளுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்த ரஷ்யா முயற்சிக்கும் என்றும் உக்ரைன் மந்திரி ஹெர்மன் ஹலுஷெங்கோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசப்பட்ட ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்கியதில் உக்ரைன் அண்டை நாடான மால்டோவா பாதிக்கப்பட்டது.
உக்ரைனில் இருந்து அந்நாட்டிற்கு செல்லும் முக்கிய மின்வழி தடம் இந்த தாக்குதலால் சேதம் அடைந்ததால், மின்வெட்டு ஏற்பட்டதாக அந்நாடு அறிவித்துள்ளது.
இதனிடையே ரஷ்ய வீசிய ஏவுகணை ஒன்று குறி தவறி போலந்து நாட்டின் ப்ரெஸெவோடோவா கிராமத்தில் தானியங்களை உலர்த்தும் பகுதியை தாக்கியது. இதில் இரண்டு பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ரஷ்ய ஏவுகணை தாக்குதல் குறித்து போலந்து அரசு செய்தித் தொடர்பாளர் உறுதிபடுத்தவில்லை. ஆனால் போலந்து உயர்மட்டத் தலைவர்களின் அவசர கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.