ஈரானிய இராணுவத் தளம் மீது அமெரிக்கா தாக்குதல் ; மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரான பந்தர் அப்பாஸில் உள்ள ஈரானிய இராணுவத் தளத்தை இலக்குவைத்து அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் மீண்டும் கணிசமாக உயர்ந்துள்ளன.
இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அச்சுறுத்தலாக விளங்கிய ஈரானின் நான்கு ட்ரோன் விமானங்களையும் தமது படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களின் நேரடி விளைவாக உலகளாவிய எண்ணெய் விலைகளில் மாற்றங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3.75 சதவீதமாக அதிகரித்து $97.83ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்க மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 4 சதவீதமாக அதிகரித்து $92.22ஆக உயர்ந்துள்ளது.
மூன்று மாதங்களாக நீடிக்கும் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் பின்னணியிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இப்போரினால் உலகளாவிய எரிசக்தி செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளன. உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு பொதுவாக ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டுசெல்லப்படுகிறது.
தற்போது இந்த முக்கிய கடல்வழிப் பாதை மூடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, இந்த கப்பல் போக்குவரத்துப் பாதையைப் பயன்படுத்தும் கப்பல்களைத் தாக்குவோம் என ஈரான் அச்சுறுத்தியிருந்தது.
இந்த மோதல் தொடங்குவதற்கு முன்னர் பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்று $70 நெருங்கிய விலையில் விற்பனையானது, மோதல் தீவிரமடைந்த கட்டத்தில் $120 வரையான விலைக்கு உயர்ந்தது.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் இவ்வாரம் எண்ணெய் விலை கணிசமாகக் குறைவடைந்திருந்தபோதிலும், புதிய தாக்குதல்களுடன் விலை மீண்டும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.