600-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவை தாக்கிய உக்ரைன்
ரஷ்யாவுடன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வரும் நிலையில், உக்ரைன் இதுவரை இல்லாத அளவிலான டிரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
ரஷியாவின் 12 மாகாணங்கள் மற்றும் கிரீமியா தீபகற்பத்தை குறிவைத்து ஒரே இரவில் 600-க்கும் மேற்பட்ட டிரோன்கள் ஏவப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதலில் ரஷ்யாவின் போர்க்கப்பல்கள், ரேடார் நிலையங்கள் மற்றும் முக்கிய ரசாயன ஆலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், சேதத்தின் முழுமையான விவரங்கள் குறித்து சுயாதீன உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.
தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி, "போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யாவை கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இரு தரப்பினரின் தாக்குதல்களில் மொத்தம் மூவர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.