ரஷ்யா மீது பயங்கர தாக்குதலை நடத்திய உக்ரைன்! பற்றி எரிந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கு
உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் இந்த போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.
இவ்வாறான நிலையில், இன்றைய தினம் (19-01-2024) மேற்கு ரஷ்யாவில் எண்ணெய் சேமிப்பு கிடங்கை குறிவைத்து உக்ரைன் படை டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. குறித்த தாக்குதலில் எண்ணெய் சேமிப்பு கிடங்கு பற்றி எரிந்துள்ளது.
உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிளின்ட்சி நகரில் இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது.
டிரோன் தாக்குதலில் 6,000 கன மீட்டர் கொள்ளளவு கொண்ட 4 ராட்சத டேங்குகளில் உள்ள எரிபொருள் தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கிளின்ட்சியில் பறந்து வந்த உக்ரைனின் டிரோனை, ரஷியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு செயலிழக்க செய்து வீழ்த்தியதாகவும், ஆனால் அதற்குள் டிரோனில் இருந்து வெடிகுண்டு வெளியேறி எண்ணெய் சேமிப்பு கிடங்கில் விழுந்து வெடித்ததாகவும் பிரையன்ஸ்க் பிராந்திய ஆளுநர் கூறியுள்ளார்.
இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் பிரையன்ஸ்க் பிராந்திய ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.