உக்ரேனிய ராணுவத்தினரைக் கண்டு அஞ்சி ஒளிந்துகொள்ளும் மக்கள்... வெளியான காரணம்
உக்ரேனிய ராணுவம் கடும் பின்னடைவை எதிர்கொண்டுவரும் நிலையில், அதிகாரிகள் தரப்பு பொதுமக்களை போர்முனையில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தகவல் வெளியான நிலையில், ராணுவத்தினருக்கு அஞ்சி பொதுமக்கள் பதுங்கி வருகின்றனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பல பகுதிகளில் உக்கிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதில் இரு தரப்பினரும் கடும் இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, சிறைக் கைதிகள், கொடூர கொலைகாரர்கள் என ரஷ்யா தரப்பில் களமிறக்க ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் உக்ரைன் தரப்பில், பொதுமக்களை போர் முனையில் களமிறக்க திட்டமிட்டுள்ளனர். இதன்பொருட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சார்பில் ராணுவம் அவசர உத்தரவையும் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பயந்து கட்டுமான பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் ராணுவத்தின் கண்ணில் சிக்காமல் இருக்க பதுங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுபான விடுதிகள், கடற்கரைகள், சோதனைச்சாவடிகள், வணிகவளாகங்கள் மட்டுமின்றி தேவாலயங்களிலும் ராணுவ உத்தரவு கடிதங்களை வழங்கியுள்ளனர். மட்டுமின்றி, ராணுவச் சட்டம் அமுல்லில் இருக்கும் பகுதியில் இருந்து ஆண்கள் எவரும் வெளியேறக் கூடாது என கடந்த வாரம் உக்ரைன் ராணுவம் வெளியிட்ட உத்தரவுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
உக்ரைனில் ஒரே மாதத்தில் 20,000 பேர் கொல்லப்பட்ட நிலையில், அதிகாரிகள் தரப்பில் 200 ராணுவ வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகவும் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
ஏற்கனவே 1 மில்லியன் ஆண்கள் இராணுவத்தில் உள்ளனர். தற்போது விசித்திரமாக மீண்டும் ஆட்கள் சேர்க்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் தங்கள் குடும்ப சூழலை விளக்கியும், விருப்பமில்லாதவர்களை ஏன் கட்டாயப்படுத்தி போர் முனையில் தள்ளுகிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தேவாலயம் சென்ற பல ஆண்களுக்கும் ராணுவத்தில் சேர்வதற்கான உத்தரவு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, இரவு விடுதிக்கு சென்றவர்களுக்கு தொடர்புடைய கடிதங்களை ராணுவ அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
போருக்கு முன்பு, உக்ரைன் இராணுவத்தில் சுமார் 125,000 வீரர்களும் 102,000 எல்லைக் காவலர்களும் பணியில் இருந்தனர்.
ஆனால் தற்போது, இராணுவம், பொலிஸ் மற்றும் எல்லைக் காவலர்களின் எண்ணிக்கை 950,000 பேர் மட்டுமே என வெள்ளிக்கிழமை பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.