உக்ரைன் போர் தீவிரம் ; பதுங்கு குழியில் இருந்து உத்தரவு வழங்கும் புதின்
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த நான்கு ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் போர்நிலை தொடரும் சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய உளவு பிரிவுகள் மற்றும் புதினுக்கு நெருக்கமான வட்டாரங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில், உக்ரைன் போரின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து புதின் நீண்ட நேரங்களை பதுங்கு குழிகளில் செலவிட்டு வருவதாக கூறப்படுகிறது.

அங்கிருந்தபடியே ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான உத்தரவுகளை வழங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பெருந்தொற்று காலத்திலிருந்தே தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை முறையை அதிகரித்திருந்த புதின், தற்போது பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் மேலும் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதம் முதல், ஆட்சி கவிழ்ப்பு முயற்சி அல்லது டிரோன் தாக்குதல் போன்ற அச்சுறுத்தல்கள் குறித்து கிரெம்ளின் அதிகாரிகள் கவலை வெளியிட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, உக்ரைன் முன்னெடுத்து வருவதாக கூறப்படும் “Operation Spiderweb” என்ற ரகசிய நடவடிக்கை ரஷிய தரப்பில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழ்நிலையில், புதின் மற்றும் அவரது குடும்பத்தினர் மாஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லங்களில் தங்காமல், தெற்கு ரஷ்யாவில் உள்ள பாதுகாப்பு பதுங்கு மையங்களில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, அரசாங்க ஊடகங்கள் முன்பே பதிவு செய்யப்பட்ட காட்சிகளை வெளியிட்டு, இயல்பு நிலை தொடர்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக சில சர்வதேச பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதினுடன் நெருக்கமாக பணியாற்றும் சமையல்காரர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பொது போக்குவரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், புதினின் அருகில் மொபைல் போன்கள் மற்றும் இணைய வசதிகளை பயன்படுத்துவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.