அமெரிக்க மாகாணம் ஒன்றில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பீதியடைந்த மக்கள்
அமெரிக்க மாகாணமான கலிபோர்னியாவில் நேற்று (20-12-2021) சக்திவாய்ந்த ஏற்பட்டது. குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, சான்பிரான்சிஸ்கோ நகரில் இருந்து வடமேற்கே 375 கி.மீ. தொலைவில் குறித்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி அமைந்திருந்தாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சுமார் 20 வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
குறித்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்ததாகவும், சாலைகளில் பெரிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், நிலநடுக்கம் காரணமாக சுமார் 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 கோடியே 54 லட்சம்) அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதேசமயம் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை. அதேபோல் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.