அமெரிக்காவில் மற்றொருமொரு இந்திய வம்சாவளி பெண்ணுக்கு கிடைத்த உயரிய பதவி!
திபெத் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த பெண் தூதரக அதிகாரியான உஸ்ரா ஷீயாவை (Uzra Zeya) ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) நியமித்துள்ளார்.
கடந்த 1959-ம் ஆண்டு சீனா திபெத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தது. 13-ம் நூற்றாண்டிலிருந்து திபெத் தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என்றும் அது எப்போதும் நிலைத்திருக்கும் என்று சீனா கூறி வருகிறது.
இதேவேளை, திபெத் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடித்து வரும் அமெரிக்கா பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விதமாக திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளரை நியமித்து வருகிறது.
இருப்பினும், சீனா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் திபெத் விவகாரங்களுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மூத்த பெண் தூதரக அதிகாரியான உஸ்ரா ஷீயாவை (Uzra Zeya) ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) நியமித்துள்ளார்.
இதன் மூலம் திபெத் மீதான பேச்சுவார்த்தை உடன்படிக்கைக்கு ஆதரவாக சீனாவுக்கும், திபெத் தலைவர் தலாய் லாமா அல்லது அவரது பிரதிநிதிகளுக்கும் இடையே கணிசமான உரையாடலை ஊக்குவிக்கும் பணியை உஸ்ரா ஷீயா பெற்றுள்ளார்.
இதேவேளை, தலைநகர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மூத்த அதிகாரியாக தனது தூதரக பணியை தொடங்கிய உஸ்ரா ஷீயா, கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டிரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியுறவு துறையில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.