அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகத்தில் பரபரப்பு ; பணியாளர்கள் வெளியேற்றம்
அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் வளாகத்தின் சில பகுதிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த பணியாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆபத்தான பொருட்கள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகமும், காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டமையும் இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

பென்டகனின் உள்முகக் கண்காணிப்பு அமைப்புகள், வளாகத்திற்குள் காற்றின் தரத்தில் அசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில பகுதிகள் முடக்கப்பட்டு, அங்கிருந்த பணியாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பாதுகாப்புப் பிரிவினரும் தொழில்நுட்ப நிபுணர்களும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும், காற்றின் தர பாதிப்புக்கான துல்லியமான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதன் தீவிரம் குறித்து விரிவான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பென்டகன் அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.