ஓமன் அருகே சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; 3 இந்திய மாலுமிகள் மாயம்
ஓமன் கடற்கரைக்கு அருகே பயணித்த சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் காணாமல் போயுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓமனின் சோஹார் துறைமுகத்திற்கு வடகிழக்கே சுமார் 20 கடல் மைல் தொலைவில் பயணித்த பலாவ் நாட்டுக் கொடியுடன் இயங்கிய Settebello என்ற எண்ணெய் மற்றும் இரசாயனப் பொருட்கள் ஏற்றிச் சென்ற கப்பல் தாக்குதலுக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பலின் எஞ்சின் அறை சேதமடைந்து தீப்பற்றியதைத் தொடர்ந்து அவசர உதவி கோரப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஓமன் கடற்படை, கப்பலில் இருந்த 24 இந்திய மாலுமிகளில் 21 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளது.
இருப்பினும் 3 மாலுமிகள் தொடர்ந்து காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலை இந்தியா கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், ஓமனில் உள்ள இந்திய தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளை முன்னெடுத்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்படும் தாக்குதல்கள் கவலைக்குரியவை என்றும், சர்வதேச கடல் போக்குவரத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய அரசு, அமெரிக்காவின் மூத்த தூதரக அதிகாரியை அழைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.