அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்
உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய படைகள், பல பகுதிகளை கைப்பற்றியுள்ளன.

தனிப்பட்ட கோரிக்கை
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் செயல்பட்டு வருகின்றன. இருநாடுகளுக்கு இடையேயான இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க அரசுத்துறைகள் அமைச்சரவைக் கூட்டத்தில், உக்ரைன் போர் குறித்த தகவல்களை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது; உக்ரைனில் கடும் குளிர் நிலவுவதால் கீவ் மற்றும் பிற நகரங்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று நான் தனிப்பட்ட முறையில் ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் கேட்டுக்கொண்டேன்.
இந்த தற்காலிக போர் நிறுத்தத்திற்கு புடின் ஒப்புக்கொண்டார். இது சிறப்பான செயல். உக்ரைன் தரப்பில் இதை முதலில் நம்பவே முடியவில்லை. அவர்கள் மிகவும் மோசமான சூழலில் போராடி வருவதால் இதைக் கேட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என கூறியுள்ளார்.