எல்லைச் சாலையை மூடும் அமெரிக்கா: கனடா, அமெரிக்க மக்களை கோபமடையச் செய்துள்ள விடயம்
பல தசாப்தங்களாக கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் மக்கள் பயணிக்கக்கூடிய சாலை ஒன்றை மூடப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ள விடயம் அப்பகுதி மக்களை கோபமடையச் செய்துள்ளது.
கனடாவின் ஆல்பர்ட்டாவிலிருந்து அமெரிக்காவின் மோன்டான்னாவை அடையும் சாலை ஒன்றை ஜூலை மாதம் 1ஆம் திகதி மூட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

அந்த சாலை அமெரிக்கா வரை நீண்டு சென்றாலும், அதை இதுவரை பராமரித்துவருவது ஆல்பர்ட்டா மாகாணம்தான். அதை அப்பகுதி மக்கள் எல்லைச் சாலை என்றே அழைக்கிறார்கள்.
கனேடியர்கள், அந்த சாலை வழியாக மறுபக்கம் இருக்கும் தங்கள் பண்ணை நிலங்களுக்குச் சென்றுவருவதுண்டு.
இரு பக்கத்திலுள்ளவர்களும் நண்பர்களாக தினமும் வாக்கிங் செல்வது முதல் பல விடயங்களை இத்தனை ஆண்டுகளாக இணைந்தே செய்துவந்த நிலையில், தற்போது அந்த சாலையை மூட அமெரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்.
அதாவது, இனி கனேடியர்கள் முன்போல் அந்த சாலை வழியாக மறுபக்கம் சென்றுவர முடியாது. அதற்கு பதிலாக, பக்கத்திலுள்ள தங்கள் பண்ணைக்குச் செல்லவேண்டும் என்றால் கூட, Coutts–Sweet Grass போன்ற அதிகாரப்பூர்வ எல்லை கடக்கும் வழியாகத்தான் இனி மறுப்பக்கம் செல்ல முடியும்.
அமெரிக்க அதிகாரிகள் தங்கள் எல்லை பாதுகாப்பை அதிகரித்துவரும் நிலையில், சட்ட விரோத எல்லை கடத்தல், கடத்தல் போன்ற விடயங்களை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆனால், இத்தனை ஆண்டுகளாக அந்த பாதையை பயன்படுத்திவந்த மக்களை, இரு தரப்பிலும் உள்ளவர்களை, இந்த முடிவு கோபமடையச் செய்துள்ளது.