உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறியது அமெரிக்கா; பெருமளவானோர் பணி நீக்கம்!
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அமெரிக்கா இன்று (ஜன 22) உத்தியோகபூர்வமாக வெளியேறுகிறது.
அமெரிக்காவின் இந்த வெளியேற்றம் உலகளாவிய ரீதியிலும் அமெரிக்காவிலும் சுகாதாரப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2025 ஆம் ஆண்டில் தனது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே, ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து தாம் விலகப்போவதாக அறிவித்தார்.
இந்நிலையில் அமெரிக்க சட்டப்படி, விலகுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும்.
அமெரிக்கா செலுத்த வேண்டிய 260 மில்லியன் டொலர் நிலுவைத் தொகையை வழங்காமல் விலகுவது சட்ட மீறல் என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலக சுகாதார ஸ்தாபனம் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவிற்கு டிரில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நிதி வழங்கலை நிறுத்துவதாக அமெரிக்க வெளிவிவகாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா வெளியேறுவதால் உலக சுகாதார ஸ்தாபனம் தனது முகாமைத்துவக் குழுவைப் பாதியாகக் குறைத்துள்ளதுடன், இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கால்வாசி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளது.
"அமெரிக்கா தனது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து மீண்டும் இணைய வேண்டும். இந்த வெளியேற்றம் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு" என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை பணிப்பாளர் வைத்தியர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விரைவில் மீண்டும் அமைப்பில் இணையும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும், ஆனால் உலகிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அவசியமானது எனவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் புதிய நோய்த்தொற்றுகளைக் கண்டறிவதற்கும், தடுப்பதற்கும் உலகம் சார்ந்துள்ள கூட்டுமுயற்சிகளை இந்த விலகல் பலவீனப்படுத்தும் என பொதுச் சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.