பரபரப்பான சாலையில் உடல் நசுங்கி பலியான பலர்
தென் எகிப்தில் பரபரப்பான சாலையில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் நால்வர் காயங்களுடன் தப்பியதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் சோஹாக் மாகாணத்தில் உள்ள ஜுஹைனா மாவட்டத்தில் பிரதான சாலையில் பயணிகள் சிற்றூந்து ஒன்று லொறி மீது மோதியதில் குறித்த கோர விபத்து ஏற்பட்டது.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த ஆம்புலன்ஸ் சேவைகள், மரணமடைந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளன. மேலும், இந்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான போக்குவரத்து பாதுகாப்பு பதிவைக் கொண்ட எகிப்தில், அதிரவைக்கும் போக்குவரத்து விபத்துக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி வருகிறது.
அதிக வேகம், மோசமான சாலை, பரிதாபமான சாலை போக்குவரத்து விதிகள் என விபத்துகளுக்கான காரணங்களை பட்டியலிடுகின்றனர்.
ஜூலை மாதம், தெற்கு மாகாணமான மின்யாவில் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிரெய்லர் டிரக் மீது பயணிகள் பேருந்து மோதியதில் 23 பேர் கொல்லப்பட்டதுடன் குறைந்தது 30 பேர் காயமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.