தையிட்டி திஸ்ஸ விகாரையின் தேரருக்கு உயரிய அதிகாரம் ; ஓரணியில் அரசும் - எதிர்க்கட்சியும்
யாழ்ப்பாணத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி, ஜின்தோட்டை நந்தாராம தேருக்கு பௌத்த கட்டமைப்பின் உயரிய அதிகாரங்களை வழங்கும் நிகழ்வு, அரசாங்கம் மற்றும் பிரதான எதிர்க்கட்சியின் இணைத்தலைமையில் எதிர்வரும் 21ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
பௌத்த மரபுகளின் அடிப்படையில், இலங்கையின் மாபெரும் வம்சங்களில் ஒன்றாகக் கருதப்படும் அமரபுர ஸ்ரீ கல்யான வம்சக் குழுவின் வடஇலங்கை தலைமைச் சங்கநாயகராக தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதனையடுத்து, அவருக்கான அதிகாரங்களை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அமைச்சர் சுனில் செனவி ஆகியோர் இணைத்தலைமை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தையிட்டி திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகளை மீள வழங்குமாறு நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் பலமுறை அறிவித்திருந்த போதிலும், காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இத்தகைய சர்ச்சைகள் தொடரும் பின்னணியிலேயே, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு உயரிய பௌத்த அதிகாரங்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், அரசாங்கத்துக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும் பல்வேறு அரசியல் விடயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தாலும், தமிழர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த சர்ச்சையான விடயத்தில் இரு தரப்பும் ஒரே நிலைப்பாட்டில் இணைந்திருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.