விசா நிறுவனம் சீனாவில் உள்நாட்டு வணிகத்தைத் தொடங்க அனுமதி
அமெரிக்காவின் முன்னணி கட்டணச் சேவை நிறுவனமான 'விசா' (Visa), சீனாவில் உள்நாட்டு வங்கி அட்டை பரிவர்த்தனை நிறுவனத்தை (Bankcard Clearing Institution) தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள சீன மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தச்சான்றின் மூலம், சீன சந்தைக்குள் நுழைவதற்கான விசா நிறுவனத்தின் நீண்டகால முயற்சியில் ஒரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ரையான் மெக்கினர்னி (Ryan McInerney) தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இடையே நடைபெற்ற உச்சிமாநாட்டின் தொடர்ச்சியாக இந்த அனுமதி கிடைத்துள்ளது.
மாஸ்டர்கார்ட் (Mastercard) மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (Amex) நிறுவனங்களைப் போல, சீனாவில் 100% முழு உரிமையுடன் தனது சேவையை விரிவாக்க விசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சீனா 2016 ஆம் ஆண்டே வெளிநாட்டு வங்கிச் சேவை நிறுவனங்களுக்குத் தனது சந்தையைத் திறந்தபோதிலும், நாட்டின் எல்லைக்குள் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் தரவுப் பாதுகாப்பு அமைப்புகளை அமைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.