சிங்கப்பூரில் முகக் கவசம் அணியாத பிரிட்டிஷ் ஆடவருக்கு 6 வாரச் சிறைத்தண்டனை
சிங்கப்பூரில் MRT ரயிலில் முகக்கவசம் அணியாமல் சென்ற பிரிட்டிஷ் ஆடவர் பெஞ்சமின் கிலினுக்கு (Benjamin Glynn) 6 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் மீதான எல்லாக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணியாதது, பொது இடத்தில் தொல்லை கொடுத்தது, அரசாங்க ஊழியரை வார்த்தைகளால் மிரட்டியது உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.
சம்பவம் தொடர்பில் 40 வயதான கிலின், இவ்வாண்டு மே மாதத்தில் இணையத்தில் பரவிய காணொளியில் காணப்பட்டார். அதில் அவர், ரயிலில் முகக்கவசம் அணியவில்லை என்பதுடன், அதைப் போல, அரசு நீதிமன்றக் கட்டடத்தின் முன்புறத்திலும் முகக்கவசத்தைச் சரியாக அணியவில்லை என கூறப்படுகின்றது.
தாம் மனோவியல் ரீதியாகக் கடந்த 3 மாதங்களாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறி்னார் கிலின். எனினும், தம்மீது சுமத்தப்பட்ட குற்றங்களை கிலின் மறுக்கவில்லை.
அத்துடன் கண்ணீருடன் தம் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடும்படி கேட்டுக்கொண்ட அவர், இங்கிலாந்துக்குத் திரும்பித் தம் பிள்ளைகளுடன் இருக்க அனுமதிக்கும்படியும் கோரியதாகவும் கூறப்பட்டுள்ளது.