தைவான் விவகாரம் அணு ஆயுதப் போருக்கு வழிவகுக்குமா? ; நிபுணர்கள் எச்சரிக்கை
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே போர் வெடித்தால், அது உலகையே அழிக்கும் அணு ஆயுதப் போராக மாறக்கூடும் என லண்டனைச் சேர்ந்த பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிங்கப்பூரில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் புதிய அணு ஆயுதப் போட்டி தீவிரமடைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பல நாடுகள் தங்களது அணு ஆயுத திறன்களை ரகசியமாக அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், இரு நாடுகளும் ஒருவரின் கட்டுப்பாட்டு மையங்களை மற்றொருவர் குறிவைத்து தாக்க முயற்சிக்கலாம் என்றும், அத்தகைய சூழலில் போரை கட்டுப்படுத்துவதற்கான சர்வதேச பாதுகாப்பு நடைமுறைகள் போதுமான அளவில் இல்லாததால் அணுஆயுத மோதல் தவிர்க்க முடியாத நிலைக்கு செல்லக்கூடும் என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய தரவுகளின்படி, அமெரிக்காவிடம் சுமார் 3,700 அணுஆயுதங்களும், ரஷ்யாவிடம் சுமார் 4,400 அணு ஆயுதங்களும் உள்ளன. அதேவேளை, சீனா தனது அணுஆயுத களஞ்சியத்தை அதிவேகமாக விரிவுபடுத்தி வருவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை, உலக அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.