ஈரானில் 11 கணவர்மாரைக் கொலை செய்த பெண்!
ஈரானில் பெண்ணொருவர் மிகவும் திட்டமிட்ட முறையில் தனது 11 கணவர்களை கொலை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
குல்தும் அக்பரி என்ற 56 வயதான பெண் மீது இவ்வாறு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
22 ஆண்டுகளில் 11 முதிய கணவர்களை பண ரீதியான நலனைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் திட்டமிட்டு கொலை செய்ததனை அக்பரி ஒப்புக்கொண்டுள்ளார்.
கருப்பு கைம்பெண்
இந்த தகவல் ஈரானில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளதுடன் அந்தப் பெண்ணுக்கு கருப்பு கைம்பெண் என பெயரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2000ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் அக்பரி, தான் திருமணம் செய்துகொண்ட 11 கணவர்களை மிக சூட்சுமமான முறையில் கொலை செய்துள்ளார்.
நீதிமன்ற விசாரணைகளின் மூலம் இந்த கொலைகள் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன. திட்டமிட்ட அடிப்படையில் வயது முதிர்ந்த ஆண்களை திருமணம் செய்து பின்னர் அவர்களை அக்பாரி கொலை செய்துள்ளார்.
இவ்வாறு திருமணம் செய்த முதியவர்களுக்கு நீரிழிவு மற்றும் உற்சாக மருந்துகள், மதுபானம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மருந்துகளை வழங்கி உடலில் மெதுவாக விசத்தை ஏற்றி கொலைகளை செய்துள்ளார். குறித்த பெண் தனது கொலை செய்தமைக்கான தடயங்களை மறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்தவர்கள் நோய்கள் காரணமாக இயற்கை மரணம் எய்தியதாக வெளிக்காட்டப்பட்டதாகவும், இருபது ஆண்டுகளாக இந்த விடயம் மறைக்கப்பட்டிருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் குறித்த பெண்ணுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.