அமெரிக்காவில் விசித்திர சம்பவம்; சுடப்பட்ட பெண் உயிர்தப்பினார் ; சுட்டவர் பலியானார்
அமெரிக்காவில் பெண்ணின் கழுத்தில் ஓர் இளைஞன் துப்பாக்கிப் பிரயோகம் செய்த நிலையில், அப்பெண்ணின் கழுத்தை தாக்கிய தோட்டா தெறித்து, துப்பாக்கிப் பிரயோகம் செய்தவரின் காலை தாக்கியதால் சுட்டவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது கழுத்தில் சுடப்பட்ட பெண் உயிர்தப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விசித்திர சம்பவம் குறித்து தெரியவருகையில்,
டெக்ஸாஸ் மாநிலத்தின் டாலஸ் நகரில் கடந்த சனிக்கிழமை காலை 11.39 மணியளவில் இத் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து டாலஸ் நகர பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜூலை 30 ஆம் திகதி காலை 11.39 மணியளவில் துப்பாக்கிப் பிரயோகம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. பொலிஸார் அங்கு சென்றபோது, வீடொன்றுக்கு முன்னால் பெருமளவு இரத்தம் காணப்பட்டது. ஆனால் அவ்வீட்டில் எவரும் இருக்கவில்லை.
சிறிது நேரத்தின் பின்னர், உள்ளூர் வைத்தியசாலை ஒன்றிலிருந்து டாலஸ் பொலிஸ் அதிகாரிகளுக்கு அழைப்பு ஏற்படுத்தப்பட்டது. வாகனம் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட ஆணொருவரும் பெண்ணொருவரும் வைத்தியாசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்த ஆரம்ப விசாரணைகளின்படி, வீட்டில் நடந்த மோதல் ஒன்றின்போது, 26 வயதான பிறையன் ரெட்மன் எனும் ஆண், பெண் ஒருவரின் கழுத்தில் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த தோட்டா வெளியேறி ரெட்மனின் காலை தாக்கியது.
இதனையடுத்து வைத்தியசாலையில் ரெட்மன் உயிரிழந்தார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, காயமடைந்த பெண் அன்றைய தினமே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் வெளியேறியுள்ளார் என WFAA தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.